சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்த ஒப்புதல்!

கோப்புப்படம்:  ம.பிரபு
கோப்புப்படம்: ம.பிரபு
Updated on
1 min read

புதுடெல்லி: பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2026 முதல் ஆண்டுதோறும் 2 பொதுத் தேர்வுகள் நடத்துவதற்கு சிபிஎஸ்இ வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ், நாடு முழுவதும் 29,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்தது.

இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது. அது தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளும் கேட்டுப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில சில திருத்தங்களை செய்து பொதுத்தேர்வு மாற்றங்களுக்கு தற்போது சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் சிலர் கூறியது: “2026 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு இருமுறைகள் நடத்தப்படும். முதல்கட்டமாக பிப்ரவரி மாதமும், 2-ம் கட்டமாக மே மாதமும் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுத 26.60 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

முதல்கட்ட தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் எழுத வேண்டும். இதன் முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்படும். அந்த மதிப்பெண்களில் மாணவர்கள் மனநிறைவு கொண்டால், 2-ம் கட்ட தேர்வை எழுத வேண்டியதில்லை. மாறாக, மதிப்பெண்களை உயர்த்த விரும்பினால் மே மாத தேர்வை எழுதலாம். இதில் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

மேலும், 2-ம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும். அதேநேரம் அகமதிப்பீட்டு தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். இந்த மாற்றங்கள் மாணவர்கள் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ளவும், மன அழுத்தத்தை தவிர்க்கவும் வழிவகை செய்யும்” என்று அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in