

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (NTA) இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் அவாதியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நீட் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ வலைத்தளமான neet.nta.nic.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் அவாதியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு மொத்தம் 2276069 பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர், அதில் 2209318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 1236531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 514063 பேர் ஆண்கள், 722462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
ஆண்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார், அவர் 99.9999547 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பெண்களில் டெல்லியைச் சேர்ந்த அவிகா அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்திய அளவில் 99.9996832 சதவீத மதிப்பெண்களைப் பெற்று 5ம் இடம் பிடித்துள்ளார்.
முதல் 10 இடம் பிடித்தவர்கள் விவரம்:
ரேங்க் 1: மகேஷ் குமார் - 99.9999547 சதவீதம்
ரேங்க் 2: உட்கர்ஷ் அவதியா - 99.9999095 சதவீதம்
ரேங்க் 3: கிரிஷாங் ஜோஷி- 99.9998189 சதம்
ரேங்க் 4: மிருணாள் கிஷோர் ஜா- 99.9998189 சதவிகிதம்
ரேங்க் 5: அவிகா அகர்வால்- 99.9996832 சதவீதம்
ரேங்க் 6: ஜெனில் வினோத்பாய் பயானி- 99.9996832
ரேங்க் 7: கேசவ் மிட்டல்- 99.9996832
ரேங்க் 8: ஜா பவ்யா சிராக்- 99.9996379
ரேங்க் 9: ஹர்ஷ் கெடாவத்- 99.9995474
ரேங்க் 10: ஆரவ் அகர்வால்- 99.9995474
இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வு எழுதிய 22.09 லட்சம் பேரில் 12.36 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 13.15 லட்சம் ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 23.33 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
முடிவுகளை அறிய.. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதன் முடிவுகளை neet.nta.nic.in, exams.nta.ac.in ஆகிய தளங்களில் அறிந்துகொள்ளலாம். அதேபோல அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் தகவல்களை தங்களின் மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மேலும், மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டதன் அடிப்படையில் நீட் யுஜி 2025-க்கான இறுதி விடைக்குறிப்பையும் தேர்வெழுதியவர்கள் சரிபார்க்கலாம். இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஸ் மற்றும் பிற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். அதன்படி 2024 ஆம் ஆண்டில், பொதுப் பிரிவு போட்டியாளர்களுக்கான தகுதி 50% ஆகவும், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கான தகுதி 40% ஆகவும் இருந்தது. பொது-பிடபிள்யூடி பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.