Published : 10 Jun 2025 05:38 PM
Last Updated : 10 Jun 2025 05:38 PM
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து பரிசீலித்து, சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டுக்கான சேர்க்கை இதுவரையிலும் தொடங்கவில்லை. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 10) தீர்ப்பளித்தது. அதில், “கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். சமக்ரா சிக்ஷா திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கை - 2020 அமல்படுத்துவதை போன்றது என்பது உண்மை. கல்வி உரிமைச் சட்டதின் கீழ் உள்ள கடமைகள் சுதந்திரமானவை. கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பொறுப்புகள் மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இதை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்க அவசியம் இல்லை. மாநில அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 2024 - 25 ஆம் நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், ரூ.3586 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசு பங்கு ரூ.2151 கோடி.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதி 200 கோடி ரூபாய்க்கும் குறைவானது என்பதால், இந்த நிதியில் மத்திய அரசின் பங்கை ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதனால் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டப்படி உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும்.
சட்டத்தில் கூறியுள்ளபடி, உரிய காலகட்டத்தில் இந்த தொகையை தனியார் பள்ளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தமிழக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை எனக் கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்,” என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT