Published : 09 Jun 2025 06:22 AM
Last Updated : 09 Jun 2025 06:22 AM

சென்னை ஐஐடி ஆன்லைன் படிப்பு பட்டமளிப்பு விழா: 867 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்

சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற ஆன்லைன் பட்டப்படிப்பு பட்டமளிப்பு விழாவில், பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் கிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில் ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி உள்ளார்.

சென்னை: ஐஐடி ஆன்லைன் பட்டப்படிப்பு பட்டமளிப்பு விழாவில் 867 பேர் பட்டம் பெற்றனர். சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய 2 ஆன்லைன் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த 4 ஆண்டு கால பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களை படித்து முடிக்கும் காலத்துக்கு ஏற்ப அவர்களுக்கு ஃபவுண்டேஷன், டிப்ளமா, பிஎஸ்சி, பிஎஸ் என 4 நிலைகளில் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த ஆன்லைன் படிப்பில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் படிப்பின் பட்டமளிப்பு விழா ஐஐடியில் நேற்று நடைபெற்றது. ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி முன்னிலை வகித்தார். பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் கிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். மொத்தம் 867 பேர் பிஎஸ் பட்டம் பெற்றனர்.

அரவிந்த் கிருஷ்ணன் பேசும்போது, ``அன்றாட வாழ்வு, தொழில்கள், கொள்கை முடிவுகள் என அனைத்தையும் உருமாற்றம் செய்துகொண்டிருக்கும் டேட்டா உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இத்துறைக்கு தேவைப்படும் நிபுணர்களை உருவாக்கும் உன்னதமான பணியை ஐஐடி செய்துவருவது பாராட்டுக்குரியது'' என்று குறிப்பிட்டார்.

ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, ``பிஎஸ்சி மற்றும் பிஎஸ் இரு படிப்புகளையும் சேர்த்து மொத்தம் 867 பேர் பட்டம் பெற்றனர். அவர்களில் ஏறத்தாழ 150 பேரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு குறைவு. இன்னொரு 100 பேரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவு.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அனைவருக்கும் ஐஐடி என்ற இலக்கை நோக்கமாகக் கொண்டுதான் இந்த ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தினோம். இப்படிப்புகளில் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், கல்வியை உண்மையிலேயே ஜனநாயகமாக்கி உள்ளோம்'' என்றார்.

பிஎஸ் ஆன்லைன் படிப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆன்ட்ரு தங்கராஜ் பேசும்போது, ``குக்கிராமங்கள் முதல் மெட்ரோ நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இந்த ஆன்லைன் படிப்பில் சேர்ந்துள்ளனர். டேட்டா சன்ஸ் துறையில் இந்தியாவுக்கும் உலகுக்கும் நிபுணர்களை உருவாக்கி வழங்குவதில் பெருமை கொள்கிறோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x