Last Updated : 10 Jul, 2018 10:38 AM

Published : 10 Jul 2018 10:38 AM
Last Updated : 10 Jul 2018 10:38 AM

கிண்டி பொறியியல் கல்லூரி 225: பொறியியல் கல்வியில் ஒரு கோபுரம்

சென்னையின் மத்தியில் வீற்றிருந்தாலும் பெருநகரத்தின் பரபரப்போ சலசலப்போ புழுதியோ படியாமல் கம்பீரமான அமைதியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகம் திகழ்கிறது. 200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புடைய இப்பகுதிக்குள் அடியெடுத்து வைத்த சில நிமிடங்களில் பசுமை செறிந்த அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் உணர்வு ஏற்படுகிறது. வகுப்பறை வளாகங்களும் நிர்வாகக் கட்டிடங்களும் ஆய்வகங்களும் மரங்களிடையே ஒளிந்திருக்கின்றன.

எதிர்ப்படும் மாணவர்களின் முகத்தில் தன்னம்பிக்கையும் பெருமிதமும் மிளிர்கின்றன. காரணம், இதன் ஒரு பகுதியான கிண்டி பொறியியல் கல்லூரி தாங்கி நிற்கும் 224 ஆண்டுகால வரலாறு. இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி சி.இ.ஜி. என்றழைக்கப்படும் கிண்டி பொறியியல் கல்லூரியின் பெருமைகள் அநேகம்.

ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தை நிர்ணயிக்கச் சிறந்த சான்று அதன் மாணவர்களே. அந்த வகையில் கிண்டி பொறியியல் கல்லூரியின் புகழையும் வரலாற்றையும் அங்கே படித்த மாணவர்கள் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்தக் கல்வி நிலையத்தில் பட்டை தீட்டப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தங்களை வளர்த்தெடுத்த கல்லூரியை வணங்கும்விதமாக 2014-ல் அன்றைய மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் கூடி, தங்களுடைய கல்லூரியின் வரலாற்றை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டார்கள். ‘CEG: A Journey through Time’ என்ற அந்தப் புத்தகம் மாணவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம்.

ஆங்கிலேயர் கட்டிய கல்லூரி

225-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தின் சில துளிகள்:

“இந்திய மாணவர்களுக்காகக் கிழக்கிந்திய கம்பெனியால் 1794-ம் ஆண்டு மே 17-ம் தேதி அன்றைய மதராஸின் புனித ஜார்ஜ் கோட்டையில் சி.இ.ஜி. நிறுவப்பட்டது. இந்தியாவில் தாங்கள் கைப்பற்றிய நிலப்பரப்பை அளவிட ஆங்கிலேயர்களை நியமிப்பதைக் காட்டிலும் உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளிப்பது சுலபமானது, சிக்கனமானது என்று கருதி இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. தொழிற்புரட்சிக் காலத்தில் அணை கட்டுவது, குளம் வெட்டுவது, பாலங்கள், கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கியபோது சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இது மாற்றப்பட்டது.

1859-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் சி.இ.ஜி.கொண்டுவரப்பட்டது. 1861-ல் பொறியியல் கல்லூரியாக ஆனது. புனித ஜார்ஜ் கோட்டையில் திறக்கப்பட்ட பள்ளி சேப்பாக்கம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, 1920-ல் தற்போதைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1930-களில் மின்சாரத் துறை உலக அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் முழு நேரப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. பிற்காலத்தில் 1978-ல்தான் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (PAUT) நிறுவப்பட்டது. இதுவே பின்னாளில் அண்ணா பல்கலைக்கழகமாக மாறியது. இதன் கட்டுப்பாட்டில் சி.இ.ஜி. உட்பட மற்ற பொறியியல் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டன.

அன்று பதுங்கு குழி இன்று நீச்சல்குளம்

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் சுவாரசியமான தகவல்களும் இந்த வளாகத்தைச் சுற்றி உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, போர் விமானங்களையும் பீரங்கிகளையும் சி.இ.ஜி.யில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தயாரித்து ராணுவத்துக்கு வழங்கியுள்ளனர். 1942, 1943 ஆண்டுகளில் பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொண்ட மாணவர்களுக்கு செமஸ்டர் விடுமுறை அளிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளில் அத்தனை பாடங்களும் நடத்தப்பட்டுப் பட்டமும் வழங்கப்பட்டது. போர் மூளும் நேரத்தில் மாணவர்களைப் பாதுகாக்கக் கல்லூரி வளாகத்திலேயே பதுங்கு குழிகள் வெட்டப்பட்டன. அன்று வெட்டப்பட்ட அந்தப் பதுங்கு குழிகள்தாம் இன்றைய சி.இ.ஜி. மாணவர்களின் நீச்சல்குளம்.

வெறும் 8 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. ஆண்டுதோறும் 3,000-த்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இளநிலைப் பொறியியல் கல்வியை அளித்துவருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 13 ஆயிரம் மாணவர்கள் பி.எச்டி., எம்.எஸ்., எம்.டெக். உள்ளிட்ட ஆய்வு படிப்புகளைப் படித்திருக்கிறார்கள். பொறியியல் படிப்பைக் கனவாகக் கொண்ட அனேகத் தமிழக மாணவர்களின் மனம் உச்சரிக்கும் சொல், அண்ணா பல்கலைக்கழகமாக இருக்க முக்கியக் காரணம் அதன் வேராகத் திகழும் கிண்டி பொறியியல் கல்லூரியே.

மூன்று தலைமுறை மாணவர்கள்

IMG_20180705_133315

சி.இ.ஜி. கல்லூரியைப் போலவே அதன் முன்னாள் மாணவர் அமைப்புக்கும் (AACEG) நெடிய பாரம்பரியம் உள்ளது. இந்தக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வரான ராவ் பகதூர் ஜி.நாகரத்தினத்தால் 1925-ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் ‘சி.இ.ஜி. உலக முன்னாள் மாணவர் கூட்ட’த்தை நடத்தத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் சி.இ.ஜி.யின் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர்கள் மூவரைச் சந்தித்தோம். அவர்கள் மூவரும் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

என் வகுப்பில் 2 மாணவிகள்!

தமிழகத்தில் மொத்தம் 5 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்த காலம் அது. ஐந்து ஆண்டு காலப் படிப்பாக பி.இ. எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டப் படிப்பை சி.இ.ஜி.யில் படித்து 1962-ல் பட்டம் பெற்றேன். ஆண்டுக்கு 216 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்திப் படித்தேன். எங்களுடைய கல்லூரியின் தனித்தன்மையே படிப்புக்கு இணையாகத் தனித்திறமைகளை அங்கீகரிப்பது. என்னுடைய வகுப்பில் இரண்டே மாணவிகள்தான் படித்தார்கள். அன்று பொறியியல் படித்தவர்களுக்கு நெய்வேலி அனல் மின்நிலையத்தில், அகில இந்திய வானொலியில், சுரங்கத்துறையில், டி.என்.பி.எஸ்.சி.யில் அரசு வேலை கிடைத்தது.

- வாசுதேவன்

அரசும் தனியாரும்

- விஸ்வநாதன்

சுயதொழில் காலம்

எங்களுடைய கல்லூரியின் சிறப்பு வாய்ந்த துறைகளில் ஒன்றான பி.இ. கணினி அறிவியலில் 2015-ல் பட்டம் பெற்றேன். இங்கே படிப்பவர்களுக்கு வளாக நேர்காணலின் மூலமாகவே முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும். நான் சொந்தமாகத் தொழில் நடத்துவதில் உறுதியாக இருந்ததால் படிக்கும்போதே சக மாணவர்களுடன் சேர்ந்து சொந்த ‘ஸ்டார்ட் அப்’ தொடங்கிவிட்டேன். என் வகுப்பில் 50 சதவீதத்துக்கும் கூடுதலான மாணவிகள் இருந்தார்கள்.

- சரவணன் கிருஷ்ணா

IMG_20180705_133346எது அண்ணா பல்கலைக்கழகம்?

அண்ணா பல்கலைக்கழகம் என்பது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா கட்டிடக் கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளை உள்ளடக்கியது.

2001-ல் தமிழகத்தின் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இவற்றில் தனியார் கல்லூரிகள் மட்டும் 590.

2017-ல் தமிழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர்

முதல் மாணவிகள்

லீலமா, A.லலிதா

P.K.த்ரெசியா – 1944

பொறியியல் முதல் அச்சுத்தொழில்நுட்பம் வரை

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் – 1894

எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்– 1930

தொலைத்தொடர்பு மற்றும் நெடுஞ்சாலை இன்ஜினீயரிங் – 1945

அச்சுத் தொழில்நுட்பப் இன்ஜினீயரிங் – 1982


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x