தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு  முதல்கட்ட மானியமாக ரூ.97.95 கோடி விடுவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்பு செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.97.95 கோடி நிதியானது தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2025-26-ம் கல்வியாண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் தொடர் செலவினத்துக்காக அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனவே, முதல்கட்டமாக 50 சதவீத தொகை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவதற்காக தற்போது நிதி மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிகழம் முழுவதும் உள்ள 37,476 அரசுப் பள்ளிகளுக்கும் ரூ.97.95 கோடி நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கையடக்கக் கணினிக்கு (டேப்லெட்) சிம் கார்டு வாங்கவும் (ஓர் ஆசிரியருக்கு தலா ரூ.110) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல் மாணவர்களுக்கு தனியாக கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், தூய்மைப் பணிகள், கட்டிடப் பராமரிப்பு போன்றவற்றுக்காகவும் பள்ளிகளுக்கான பொருட்கள் வாங்குதற்காகவும் செலவிட வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய காலத்துக்குள் மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், செலவின அறிக்கையை பயன்பாட்டுச் சான்றிதழுடன் இணைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in