பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னை ராணிமேரி கல்லூரியில் நேற்று பொது கலந்தாய்வுக்கு வந்திருந்த மாணவிகள். | படங்கள்: ம.பிரபு |
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னை ராணிமேரி கல்லூரியில் நேற்று பொது கலந்தாய்வுக்கு வந்திருந்த மாணவிகள். | படங்கள்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3-ம் தேதி நடந்தது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 4-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னையில் மாநில கல்லூரி, ராணி மேரி மகளிர் கல்லூரி, அண்ணாசாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் கூட்டம் அலைமோதியது. மாநில கல்லூரியில் நடைபெற்ற கலந்தாய்வு குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ஆர்.ராமன் கூறுகையில், "முதல் நாளில் வணிகவியல், கார்ப்பரேட் செக்ரட்டிரிஷிப், பொருளாதாரம், கணிதம், புள்ளியியல், உளவியல் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களின் எண்ணிக்கையை விட மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகாக இருந்தது. வியாழக்கிழமை (இன்று) பிஎஸ்சி பட்டபடிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். எங்கள் கல்லூரியில் சேர தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி 133 நாடுகளில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்." என்றார்.

பொது கலந்தாய்வு மே 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, அரசு கல்லூரிகளில் சேருவதற்கான 2-வது கட்ட விண்ணப்ப பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் துணைத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதில் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை பணிகள் முடிவுற்று முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 30-ம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in