சுழற்கேடய விருதுக்கு மாவட்ட வாரியாக சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய தொடக்க கல்வித் துறை உத்தரவு

சுழற்கேடய விருதுக்கு மாவட்ட வாரியாக சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய தொடக்க கல்வித் துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சிறந்த பள்ளிக்கான விருதுக்கு தகுதியான அரசுப்பள்ளிகளை மாவட்ட வாரியாக தேர்வு செய்து பட்டியல் அனுப்ப வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் கல்விப் பணியில் முன்னேற்றம் காணும் வகையில் ஆண்டுதோறும் மாவட்டத்தில் உள்ள 3 சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து சுழற்கேடயங்கள் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளுக்கு 114 கேடயங்கள் கடந்த நவ.14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து அந்தக் குழுவினர் பள்ளிகளை திடீரென ஆய்வு செய்து தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவர். இந்த மதிப்பீட்டின் போது மாணவர் சேர்க்கை, எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் செயல்பாடு, கற்றல் அடைவு, இணைச் செயல்பாடுகளின் மேம்பாடு, கற்பித்தலில் புதிய உத்திகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட 15 முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

மொத்த மதிப்பெண் 150 ஆகும். அதில் 135-150 வரை பெறும் பள்ளிகளுக்கு 3 நட்சத்திரங்களும், 112-135 மதிப்பெண் பெறும் பள்ளிகளுக்கு 2 நட்சத்திரங்களும், 112-க்கு கீழ் மதிப்பெண் பெறும் பள்ளிகளுக்கு ஒரு நட்சத்திரமும் என தரக்குறியீடு வழங்கப்படும். ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது. முதல் 3 இடங்களைப் பெறும் சிறந்த பள்ளிகளின் பெயர்ப் பட்டியலை மின்னஞ்சலில் ஜுன் 20-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in