அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கு வரும் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் மாநில கல்லூரி (2,380 இடங்கள்), ராணி மேரி கல்லூரி (2,038), பாரதி மகளிர் கல்லூரி (1,410), டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி (1,086), காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி (1,468), நந்தனம் அரசு கலைக் கல்லூரி (1,430), ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரி (590), ஆலந்தூர் அரசு கலைக் கல்லூரி (280) என மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 7-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 27-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்க கட்டணமாக ரூ.48-ம், பதிவுக் கட்டணமாக ரூ.2-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த கட்டணங்களை இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

கூடுதல் விவரங்களை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை அணுகியும் அல்லது 044-24343106, 044-24342911 என்ற தொலைப்பேசி எண்களையும் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in