Published : 15 May 2025 10:00 AM
Last Updated : 15 May 2025 10:00 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் ஓரே மையத்தில் பிளஸ் 2 வேதியியல் பாட தேர்வில் 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 8-ம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் தேர்வு எழுதிய 21,581 மாணவ மாணவிகளில் 20,526 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சதவீதம் 95.11 ஆகும். இந்நிலையில், செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் 251 மாணவ மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், ஒரு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், முழுமூச்சாக படித்து தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மன உளைச்சலில் உள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறும்போது, “செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 414 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என 167 பேர், வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இம்மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்கள். பிளஸ்-1 பொதுத்தேர்வில் சிறந்த விளங்கியவர்கள். பிளஸ்-2 வகுப்பில் குறுந்தேர்வு நடத்தி சிறந்த முறையில் ஆசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர். மாநில அளவில் 3,181 மாணவ - மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இயற்பியல் பாடத்தைக் காட்டிலும் வேதியியல் பாடத்தில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியிருந்தனர். தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை, நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும் படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர்.
வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேர்வு மையங்களில் துணை இயக்குநர் குழந்தைராஜன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களை குறிப்பிட்ட நேரத்தில், தேர்வு மையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது. இதற்கான விளக்கத்தை பள்ளிக் கல்வித் துறையிடம் அளிக்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT