விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் நாளை (மே 13) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 7.92 லட்சம் மாணவர்களில் 7 லட்சத்து 53,142 (95.03%) பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து, பிளஸ் 2 வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (மே 12) வெளியிடப்படுகிறது. அவற்றை மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வுத் துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த தகவல் பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (மே 13) முதல் வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கு ரூ.275 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைக் கொண்டே முடிவுகளை அறிய இயலும். மேலும், விடைத்தாள் நகல் பெற்றதும், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in