மீன்வளப் பல்கலை., எம்பிஏ, பிபிஏ பட்டப்படிப்பு: மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் தொடங்கும்

கோப்புப்  படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ‘‘தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில், மீன்வள வணிக மேலாண்மையில் எம்பிஏ, மற்றும் பிபிஏ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அடுத்த மாதம் தொடங்கும்’’ என, அப்பல்கலைக் கழகத்தின் திட்ட இயக்குநர் நாகஜோதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மீன்வள வணிகப் பள்ளி திட்ட இயக்குநர், டாக்டர் வி. நாகஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அங்கீகாரம் பெற்ற இப்பல்கலைக் கழகம், மீன்வள வணிக மேலாண்மையில் எம்பிஏ (MBA) மற்றும் பிபிஏ ( BBA) பட்டப் படிப்புகளை வழங்குகிறது.

எம்பிஏ படிப்பில் சேர ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பிபிஏ படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளில் சேர தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மாணவர் சேர்க்கைக்கான அனைத்து நடைமுறைகளும் அடுத்த மாதம் தொடங்கும். இப்படிப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச மீன்வளத் துறையில் பிரகாசமான வேலை வாய்ப்புகளையும், தொழில் முனைவோராக உருவெடுக்கவும் வழிவகுக்கிறது.

மேலும், மீன்வளத் துறையின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை ஆழமாகப் புரிந்து, வணிக மேலாண்மையில் சிறந்து விளங்கும் தலைவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம். கோட்பாட்டு அறிவையும், நேரடி அனுபவத்தையும் இணைத்து, நிலையான மீன்வளர்ப்பு முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம்.

எங்கள் பல்கலைக்கழகத்தின் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், துறை சார்ந்த நிபுணத்துவத்தையும், நடைமுறை அறிவையும் மாணவர்களுக்கு வழங்குகின்றனர். மீன்வள மற்றும் வணிக மேலாண்மையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, எங்கள் பாடத் திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறோம். இதனால், மாணவர்கள் தொழில்துறையின் சவால்களை எதிர்கொள்ளும் திறனைப் பெறுகிறார்கள். மேலும், முன்னணி மீன்வள நிறுவனங்களில் பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

இது மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, மதிப்புமிக்க தொழில் தொடர்புகளை உருவாக்கவும் உதவுகிறது. இதன் மூலம், சிறந்த வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பெற முடியும். இப்படிப்புகளின் சிறப்புகளை அறிந்து கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்கள் பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து பேராசிரியர்களை சந்தித்துப் பேசலாம்.

இதுகுறித்து, கூடுதல் விவரங்களுக்கு 824 871 3626, 044 27440142 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் Nagajothi@tnfu.ac.in என்ற இ-மெயில் மூலமும் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in