நீட் தேர்வு குறித்த புகார்களை தெரிவிக்க இணையதளத்தில் வசதி: என்டிஏ அறிவிப்பு

நீட் தேர்வு குறித்த புகார்களை தெரிவிக்க இணையதளத்தில் வசதி: என்டிஏ அறிவிப்பு
Updated on
1 min read

நீட் தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க, என்டிஏ இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ (NEET) தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான புகார்களை தேர்வர்கள் தெரிவிக்க, இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த புகார்களை https://nta.ac.in மற்றும் https://neet.nta.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் மே 4-ம் தேதி மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம். அதாவது, தங்களிடம் நீட் வினாத்தாள் இருப்பதாக, அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள், சமூக வலைதளங்களில் தகவல் வந்தாலோ, என்டிஏ மற்றும் அரசு அதிகாரிகள்போல யாராவது பேசி தொடர்பு கொண்டாலோ இந்த தளத்தில் புகார் அளிக்கலாம். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர் தவறு செய்தது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வழிகாட்டுதலால் ஏமாற்றி, முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in