Published : 11 Apr 2025 07:28 PM
Last Updated : 11 Apr 2025 07:28 PM
சென்னை: ‘பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கொண்டுவர வேண்டும். தமிழ் வழியில் படிப்போருக்கு கட்டணச் சலுகை மற்றும் வேலைவாய்ப்பு உறுதியை தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி 34 தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ் எழுச்சிப் பேரவை செயலர், முனைவர் பா.இறையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழுக்காக தங்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பாராட்டு. பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பது கட்டாயம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பாராட்டுகிறோம். பொறியியல் மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமரும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கூறியுள்ளனர்.
தமிழத்தில் முன்பே பொறியியல், மருத்துவம் தமிழ் வழிக்கல்வி முயற்சிகள் நடந்து பொறியியல் ஓரளவு நூல்கள் உள்ளன. மூதறிஞர் ராஜாஜி கூறியது போல ஆங்கில நூல்கள் வைத்துப் பாடம் நடத்தினால், உடனே துணை நூல்கள் தர அறிவியல் அறிஞர்களும் பதிப்பகங்களும் தயாராக உள்ளனர். பொறியியலில் இரண்டு படிப்புகள் மட்டும் உள்ளன; அவற்றில் 90 சதவீதம் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறுகின்றனர். இதுவே நல்ல வெற்றி.
எனவே, வரும் கல்வியாண்டில் பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் பயில முன்வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடியும், வேலைவாய்ப்பு உறுதியும் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT