சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்கள் கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம்: ஐகோர்ட் உத்தரவு

சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்கள் கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம்: ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூர் அருகே சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்ட பஷீரின் நியமனத்தை, அவர் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் அங்கீகரிக்க மறுத்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, தான் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டதை அங்கீகரிக்க கோரி பஷீர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த தனி நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவின் விவரம்: சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. தகுதிகளை நிர்ணயம் செய்ய என்சிடிஇ-யை கல்வி ஆணையமாக அரசு நியமித்து உள்ளது. அது ‘டெட்’ தேர்வு தேர்ச்சியை தகுதிகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது.

எனவே ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதி, சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த வழக்கில், விண்ணப்பதாரர் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி தகுதி அடிப்படையில் ஆசிரியர் நியமனதுக்கு அனுமதி மறுத்து கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in