ஆண்டு விழாவில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

ஆண்டு விழாவில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டுவிழா சிறந்த முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் சட்டப் பேரவையில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளி ஆண்டு விழா கொண்டாட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.15 கோடி நிதியை பகிர்ந்தளித்து விழாவுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியுள்ளனர். அதில் ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறித்த டி-சர்ட்டை கையில் பிடித்துக் காட்டியதோடு, 2 மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை அணிந்து நடனம் ஆடியதாகவும் புகார் மனு இயக்குநரகத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து அரசுப் பள்ளிகளில் ஆண்டுவிழாவின் போது இத்தகைய திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறினால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது விதியின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in