உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை 

உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை 
Updated on
1 min read

மதுரை: இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பு வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் சத்திரப்பட்டியைச் சேர்ந்த செல்லமுத்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மத்திய கல்வி அமைச்சகம் அங்கீகரித்துள்ள தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எப்) இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள சிறந்த உள்கட்டமைப்பு வசதி, பேராசிரியர்களின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட தரவுகளை ஆய்வு செய்து சிறந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிடும்.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு உயர்கல்வி நிறுவனங்கள் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வெளியிடும் சிறந்த கல்லூரிகளில் சில கல்லூரிகள் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளன.

எனவே, உரிய உண்மையான தரவுகளை சரி பார்த்து, ஒப்பிட்டு கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அரசு ஆவணங்களில் உள்ள பதிவுகளில் இருக்கும் தரவுகளுடன் ஒப்பிட்டு, அவற்றை சரிபார்த்து உறுதி செய்த பின் நடப்பாண்டு தரவரிசை பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு இன்று விசாரித்து. சிறந்த கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான என்ஐஆர்எப் தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து, மனு குறித்து மத்தியக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in