

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, நூற்றாண்டை கடந்து பழமை வாய்ந்தது. இப்பள்ளிக்கான மைதானம், ஏடிசி பகுதியில் உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இந்த மைதானம் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாடி வந்தனர். அரசு பள்ளியில் நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. நகரின் மையப் பகுதியில் இப்பள்ளி உள்ளதால், கல்வித் துறையின் சில அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக இந்த விளையாட்டு மைதானம் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பிறர் தங்களது வாகனங்களை மைதானத்தில் நிறுத்துகின்றனர். இதனால், மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெற்றோர் கூறும்போது, "உதகை அரசு மேல்நிலைப் பள்ளி, 1907-ம் ஆண்டு நகராட்சி பள்ளியாக தொடங்கப்பட்டு, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், நகராட்சிக்கு சொந்தமான காந்தி மைதானம் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
மாணவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், பள்ளி வளாகத்தில் கூடைப் பந்து மைதானமும் உருவாக்கப்பட்டது. பள்ளி மைதானத்துக்கு செல்லாதபோது, இந்த மைதானத்திலேயே உடற்கல்வி வகுப்பு, இடைவேளை மற்றும் உணவு இடைவேளையில் விளையாடி வந்தனர்.
இந்நிலையில், சொந்த வாகனங்களில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கு வருபவர்கள் மைதானத்தில் நிறுத்துவதால், மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களை வேறு பகுதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.