

சென்னை: இ்ந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) பட்டமளிப்பு விழாவில் சென்னை மண்டலத்தில் 1470 பேர் பட்டம் பெற்றனர். இரு மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோவின் 38-வது பட்டமளிப்புவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. டெல்லியில் பட்டமளிப்புவிழா நடைபெற்ற அதேநேரத்தில் சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள இக்னோவின் மண்டலங்கள் சார்பிலும் பட்டமளிப்பு விழா நடந்தது. டெல்லி பட்டமளிப்பு விழாவில் 3.16 லட்சம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு படிப்புகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தங்கப்பதக்கங்களை வழங்கினார். எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் பி.சாய் சூர்யா, எம்எஸ்சி புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் படிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் பி.மணிகண்டன் ஆகியோர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மண்டல இக்னோ பட்டமளிப்பு விழா அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி கலையரங்கில் நடந்தது. இதில் மத்திய உவர்மீன் வளர்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் குல்தீப் குமார் லால் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில், மொத்தம் 1,470 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக வரவேற்புரையாற்றிய சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம், பல்வேறு சமூகப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க இக்னோ உறுதிபூண்டுள்ளது என்றார்.