

பட்டயக் கணக்காளர் பணிக்கான சிஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனும் பட்டயக் கணக்காளர் பணித் தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படுகிறது. இந்த சிஏ தேர்வு அடிப்படை, இடைநிலை, இறுதி என 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆடிட்டராக முடியும். பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் அடிப்படைத் தேர்வை எழுதாமல், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வை எழுதினால் போதுமானது.
அந்தவகையில் பட்டய கணக்காளர் பணிக்கான அடிப்படை மற்றும் இடைநிலை தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம், நாடு முழுவதும் 533 நகரங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை http://icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடிப்படைத் தேர்வை 1 லட்சத்து 10,887 பேர் எழுதினர். இதில் 23,861 (21.52%) பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதேபோல், இடைநிலைத் தேர்வில் குரூப் 1 பிரிவில் ஒரு லட்சத்து 8,187 பேர் பங்கேற்றதில் 15,332 (14.17%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2 பிரிவில் 80,368 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 17,813 (22.16%) பேர் வெற்றி அடைந்துள்ளனர். இந்த 2 பிரிவுகளையும் சேர்த்து 48,261 பேர் எழுதினர். அதில் 6781 (14%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இடைநிலைத் தேர்வில் தேசிய அளவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி தீபான்ஷி அகர்வால் முதலிடம் பெற்றுள்ளார். இவர் 600-க்கு 521 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.