Published : 27 Feb 2025 08:01 AM
Last Updated : 27 Feb 2025 08:01 AM
ஏஐசிடிஇயின் யசஸ்வி, சரஸ்வதி ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 28) நிறைவுபெறுகிறது.
தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கையை மேம்படுத்துவதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பொறியியலில் மெக்கானிக்கல், சிவில் போன்ற அடிப்படை பாடப் பிரிவுகளில் சேர விரும்பும் தகுதி மாணவர்களுக்காக ‘யசஸ்வி’ எனும் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.50,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஏஐசிடிஇயால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்கும் 2,593 மாணவர்கள், டிப்ளமோ பயிலும் 2,607 மாணவர்கள் என மொத்தம் 5,200 பேருக்கு ஆண்டுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். தமிழகத்தில் 783 பேருக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.
இதேபோல், தொழில்நுட்ப கல்வியை தொடர விரும்பும் மாணவிகளுக்கு உதவும் நோக்கத்தில் 'சரஸ்வதி' என்ற திட்டமும் அமலில் இருக்கிறது. இதன்கீழ் ஆண்டுக்கு ரூ.25,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்பை தொடர விரும்பும் 3,110 மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். இவ்விரு உதவித் தொகை திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 28) நிறைவு பெறுகிறது. இதையடுத்து தகுதியான மாணவர்கள் https://scholarships.gov.in என்ற வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT