Published : 26 Feb 2025 06:41 AM
Last Updated : 26 Feb 2025 06:41 AM
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளை தேர்வுத் துறை முடுக்கி விட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப். 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 வகுப்பில் 8.21 லட்சம் மாணவர்கள், பிளஸ் 1-ல் 8.23 லட்சம் பேர், பத்தாம் வகுப்பில் 9.13 லட்சம் பேர் என மொத்தம் 25.57 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 3,316 மையங்களும், பத்தாம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை அலுவலர் நியமனம் உட்பட இறுதிகட்ட பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்வுத் துறை அலுவலர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,426 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே போல், பொதுத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக பிளஸ் 1 தேர்வுக்கு 44,236 பேரும், பிளஸ் 2 தேர்வுக்கு 43,446 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முறைகேடுகளை தடுக்க பத்தாம் வகுப்புக்கு 4,858, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதி சரிபார்ப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் வசதிக்காக கடந்த ஆண்டைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்துதல் பணிக்காக தமிழகம் முழுவதும் 150 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT