

சென்னை: 10-வது தொழில்முனைவோர் உச்சிமாநாடு சென்னை ஐஐடி-யில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள், 400 முதலீட்டாளர்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மாணவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களை தொழில்முனைவோர் ஆக்கவும் ஐஐடியில் தொழில்முனைவோர் மேம்பாட்டுப்பிரிவு என்ற பிரத்யேக மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் சார்பில் ஆண்டுதோறும் தொழில்முனைவோர் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 10-வது தொழில்முனைவோர் உச்சிமாநாடு பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள், 400 முதலீட்டாளர்கள், 400 கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களின் புதுமையான சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இந்த மாநாடு நல்ல தளமாக அமையும்.
மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புத்தாக்க நிறுவனங்களாக (ஸ்டார்ட்-அப்) மாறுவதற்கும் இந்த மாநாடு உதவும். இந்தியா, தொழில்நுட்பத்துறையில் இறையாண்மை கொண்ட நாடாக திகழ வேண்டுமானால் புதிய பொருட்களை உருவாக்கக்கூடிய நாடாகவும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகம் இருக்கக்கூடிய நாடாகவும் மாற வேண்டியது அவசியம். அந்த வகையில், புதுமையான சிந்தனைகள் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக உருவாவதற்கு இந்த தொழில்முனைவோர் உச்சிமாநாடு வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐஐடி டீன் (மாணவர்கள் நலன்) பேராசிரியர் என்.சத்யநாராயணா கூறும்போது. "இந்த 3 நாள் மாநாட்டில் மாணவர்களின் படைப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் பிரம்மாண்ட தொழில் கண்காட்சியும் இடம்பெறுகிறது" என்றார்.