

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ‘கீரின் ஒலிம்பியாட்’ தேர்வில் மாணவர்கள் பங்கேற்க கல்லூரிகள் ஊக்குவிக்க வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: “நம்நாட்டில் இளம் தலைமுறையினரிடம் சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் மத்திய எரிசக்தி மற்றும் வள நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும், ‘கீரின் ஒலிம்பியாட்’ பார் இளைஞர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ‘கீரின் ஒலிம்பியாட் பார் இளைஞர்கள்-2025’ தேர்வு ஏப்ரல் 7 முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 18 வயது முதல் 30 வரையான மாணவர்கள் இத்தேர்வுக்கு மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதல் 3 மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் கீரின் ஒலிம்பியாட் தேர்வில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.