பேராசிரியர் அன்பழகன் விருது: தகுதியான பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பேராசிரியர் அன்பழகன்  | கோப்புப் படம்
பேராசிரியர் அன்பழகன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தேர்வு செய்து பிப்ரவரி 27-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன், தலைமைத்துவம், மாணவர் மேம்பாடு பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளிகளை தேர்வு செய்வதற்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலும், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தலைமையில் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்தக் குழு மாவட்டத்துக்கு தகுதியான 4 பள்ளிகளை தேர்வுசெய்து பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைக்க வேண்டும். அதில் ஒரு மாவட்டத்துக்கு தலா 2 பள்ளிகள் வீதம் மொத்தம் 76 சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும்.

இதற்கிடையே சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்யும்போது பொதுத் தேர்வுகள், திறனறித் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு, தினசரி கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள், வகுப்பறையில் தொழில்நுட்பப் பயன்பாடு, கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள், உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, விளையாட்டு போட்டிகள், கலைத் திருவிழா மற்றும் கட்டமைப்பு வசதிகள் என்பன உட்பட பல்வேறு காரணிகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து கருத்துக்களை பிப்ரவரி 27-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in