

சென்னை: வாழ்வியல் அறிவியல், சுகாதாரம் ஆகிய துறைகளில் கூட்டு ஆராய்ச்சி செய்வது தொடர்பாக அஜிலிசியம் டேட்டா இன்னோவேஷன் நிறுவனத்துடன் சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி முன்னிலையில் ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் தலைமை செயல்பாட்டு அலுவலர் ஜி.வீரராகவன், அஜிலிசியம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ராஜ்பாபு ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் வாழ்வியல் அறிவியல், சுகாதாரம் தொடர்பாக கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடும். ஐஐடியின் கிராமப்புற கலந்துரையாடல் மையங்கள் மூலம் தரமான கல்வி, தகவல் தொழில்நுட்ப அறிவு மேம்பாடு, அறிவாற்றல் - திறன் மிக்க உள்ளூர் மக்களை அதிகாரப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
சமூக பாதுகாப்பு திட்டங்கள், புதுமையான தீர்வுகளில் கூட்டு ஆராய்ச்சி பணியில் அஜிலிசியம் நிறுவனம் ஈடுபடும். டேட்டா பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணியை மேம்படுத்தும் என்று ஐஐடி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.