

கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மனோகரன். தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். இவர் மாணவர்கள் அடையாள அட்டையில் அவர்களை பற்றிய விவரங்களை க்யூஆர் கோடில் இடம் பெற செய்தவர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வெள்ளி விழா ஆண்டு கொண்டாப் படுவதையொட்டி, 1,330 திருக்குறள்களுக்கும், விளக்கத்துடன் தனித்தனி க்யூஆர் கோடு வடிவமைத்துள்ளார். இதன் மூலம் செல்போன் வாயிலாக க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யும்போது திருக்குறள்களையும், மு.வரதராசன், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் எழுதிய விளக்க உரையையும் வாசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் மனோகரன் கூறியது: 1,330 திருக்குறள்களுக்கும் தனித்தனியாக க்யூஆர் கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பள்ளியில் மாணவர்களுக்கு எனது செல்போன் மூலம் ஸ்கேன் செய்து படிக்க வைத்து வருகிறேன்.
மேலும், இதை பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வாட்ஸ்அப் குரூப்புக்கு அனுப்பியுள்ளேன். இதை மாணவர்கள் வீட்டில் செல்போனை பார்க்கும்போது, பொழுதுபோக்கும் நேரங்களில் கூட திருக்குறளை மிக எளிதாக படிக்கலாம். இணையதள வசதி இல்லாமலே ஸ்கேன் செய்து திருக்குறளை படித்து, புரியாத வார்த்தைகளுக்கு ஆடியோ வடிவில் விளக்கம் அளிக்கும் வசதி உள்ளது. விரைவில் திருக்குறளை வீடியோ வடிவில் பதிவேற்றம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.