Published : 11 Feb 2025 05:52 AM
Last Updated : 11 Feb 2025 05:52 AM

மார்ச் மாதத்தில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு: முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வை (செட்) மார்ச் மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் அல்லது செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையும், செட் எனப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வை சம்பந்தப்பட்ட மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்துகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் செட் தகுதித்தேர்வை 2024 முதல் அடுத்த 3 ஆண்டு காலத்துக்கு நடத்த திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து, செட் தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை அந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றது. செட் தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஹால் டிக்கெட்டையும் ஆன்லைனில் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக அதாவது ஜுன் 5-ம் தேதி அன்று, தொழில்நுட்பக் காரணங்களால் செட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதனால், செட் தேர்வு தேர்வெழுத தயாராக இருந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஸ்லெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்து தமிழக அரசு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் அரசாணை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, மனோன்மணீயம் சுந்தரனா பல்கலைக்கழக அறிவிப்பின்படி செட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் அனைத்து தரவுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. செட் விண்ணப்பதார்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் செட் தேர்வு நடத்தப்படவில்லை.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "செட் தேர்வுக்கு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அவர்களின் விவரங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. செட் தேர்வை மார்ச் மாதத்தில் நடத்த முடிவுசெய்துள்ளோம்" என்றார்.

புதிய விண்ணப்பதாரர்கள் கோரிக்கை: இதற்கிடையே, செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று புதிய விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய முதுகலை பட்டதாரிகளும், தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் கூறும்போது, "பொதுவாக ஒரு தேர்வு வாரியம் தேர்வு நடத்துவதற்கு முன்பாக தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும். அதன்பிறகு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும். அந்த வகையில், செட் தேர்வு நடத்தும் பொறுப்பு டிஆர்பி-க்கு முதல்முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, டிஆர்பி சார்பில் செட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு புதிய விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டு்ம். செட் தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாத்ம் வெளியிடப்பட்டது. இ்ப்போது ஓராண்டு நெருங்கிவிட்டது. அடுத்த செட் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது தெரியாது. எனவே, டிஆர்பி செட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு புதிய விண்ணப்பதாரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். முதுகலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் நெட், செட் தகுதிதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x