

புதுடெல்லி: மாணவர்கள் அச்சமின்றி பொதுத் தேர்வுகளை எழுத ஊக்கமூட்டும் கலந்துரையாடல்களை பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். இந்த ஆண்டுக்கான கலந்துரையாடல் கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வு குறித்த கலந்துரையாடல், பிப்.10-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, தேர்வுக்கான தயாரிப்பு, மன அழுத்த மேலாண்மை குறித்த நுண்ணறிவுத் திறன்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.
இந்த ஆண்டு, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்தும் அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், ஏக்லவ்யா உறைவிடப்பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள் (சிபிஎஸ்இ) மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் ஆகியவற்றிலிருந்து 36 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கும் பன்முகத்தன்மையின் உண்மையான பிரதிபலிப்பாக இந்த மாணவர்கள் தேர்வு அமைந்துள்ளது.
புதிய பரிமாணத்தையும் சேர்த்துக்கொண்டு, தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025 பதிப்பு எட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான புதிய வடிவத்தில் வெளிப்படும். பிரதமருடனான முதல் உரையாடல் தூர்தர்ஷன், சுயம், சுயம் பிரபா, பிஎம்ஓ யூடியூப் சேனல் மற்றும் கல்வி அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சமூக ஊடக சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த வளமான அனுபவத்தில் பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.
தேர்வு குறித்த கலந்துரையாடல் ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளதால், நமது குழந்தைகளின் உடல் மற்றும் மன நல்வாழ்வு குறிப்பிடத்தக்க சமூக ஈடுபாட்டின் மூலம் கவனிக்கப்படுகிறது. அதன்படி, இந்த 8-வது பதிப்பு பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆளுமைகளைக் கொண்டுள்ளது. அடுத்தடுத்த 7 அத்தியாங்களில், அவர்கள் தங்கள் அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வார்கள். வாழ்க்கை மற்றும் கற்றலின் முக்கிய அம்சங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த தேர்வு குறித்த கலந்துரையாடல் - நாடு தழுவிய இயக்கமாக பரிணமித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் நிகழ்ச்சியில் 5 கோடிக்கும் அதிகமான பங்கேற்பு பதிவாகி முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது, இது இன்றுவரை மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பதிப்பாக இந்த ஆண்டின் பதிப்பு உருவாகியுள்ளது.
அனைத்து பின்னணியிலிருந்தும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தத் தளத்தை அணுகுவதை உறுதிசெய்ய கல்வி அமைச்சகம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வு குறித்த கலந்துரையாடலானது இளம் மனங்களை வளர்க்கும், கல்வி வெற்றி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-ஐப் பார்க்குமாறு அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்வு குறித்த கலந்துரையாடல் மீண்டும் வந்துவிட்டது, அதுவும் புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில்! அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025’ ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.