Published : 05 Feb 2025 02:33 AM
Last Updated : 05 Feb 2025 02:33 AM
புதிதாக 10 ஆயிரம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து 10 ஆயிரம் முதுநிலை படிப்புக்கான இடங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இரங்கியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 1.2 லட்சம் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அதேபோல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களையும் உயர்த்துவது என மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் சிறப்பு மருத்துவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) இலக்கை எட்டுவதில் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தற்போது நமது நாட்டில் 13.86 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். நம் நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தற்போது 1,263 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். இந்நிலையில் புதிய மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதன் மூலம் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை 2030-க்குள் எட்ட முடியும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த 6 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் மருத்துவர்கள் படிப்பு முடித்து வெளியே வரும்போது இந்த இலக்கை
எளிதில் எட்ட முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். 2019-ல் நமது நாட்டில் 499 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இது 2023-ல் 648-ஆக உயர்ந்தது. 2025-ம் ஆண்டு முடிவுக்குள் இது 780-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT