Published : 04 Feb 2025 07:13 PM
Last Updated : 04 Feb 2025 07:13 PM

விநியோகச் சங்கிலி மேலாண்மை படிப்பு மீண்டும் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி) சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (Centre for Outreach and Digital Education- CODE) மையம் சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (Supply Chain Management professional – SCMPro) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி, விநியோகச் சங்கிலி மேலாண்மையில் கூட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்காக சிஐஐ-யுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், சென்னை ஐஐடி ஆசிரியர்கள் வீடியோ விரிவுரைகள் மூலம் வழங்கும் பயனுள்ள தகவல்களும் தற்போது இடம்பெற உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் ‘எஸ்சிஎம் புரோ’ சான்றிதழ் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 40,000-க்கும் மேற்பட்ட வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் உயர்மட்ட கல்வி நிபுணத்துவத்துடன் கூடிய பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து இதனை மேம்படுத்த உள்ளது. இப்புதிய பாடத்திட்டம், பங்கேற்பாளர்களுக்கு மேம்பட்ட திறன்களையும் விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த உலகளாவிய நுண்ணறிவையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. போட்டிகள் நிறைந்த துடிப்புமிக்க தொழில்துறையில் அவர்கள் சிறந்து விளங்க இந்தப் படிப்பு உதவிகரமாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்பம், மின்வணிகம், சில்லறை விற்பனை, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களும், பொறியியல், வணிகம், அறிவியல், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடத்திட்டம் ஏப்ரல் 1, 2025 அன்று தொடங்கப்பட உள்ளது. இதில் சேருவதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31, 2025. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - https://code.iitm.ac.in/supply-chain-management-professional-certification-scm-pro

இப்பாடத்திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் (CODE) தலைவரும், பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், “இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்துறை நுண்ணறிவையும் சென்னை ஐஐடி-ன் சிறந்த கல்வியையும் இணைப்பதன் வாயிலாக, புதுப்பிக்கப்பட்ட இப்பாட நெறி உலகளாவிய, எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் விநியோகச் சங்கிலித் தொழில் துறையில் வெற்றிபெறுவதற்கான கருவிகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்கும்” என்றார்.

இதுபோன்ற படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கமளித்த சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான கே. வி. மஹிதர், “சென்னை ஐஐடி சிஐஐ உடன் இணைந்திருப்பதன் மூலம், இந்த ஒத்துழைப்புத் திட்டத்தை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சென்னை ஐஐடி கல்விப் பாடநெறிகளின் டீன் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது, "சென்னை ஐஐடி- சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு, கல்வி கற்றல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இத்திட்டத்தில் சென்னை ஐஐடி ஆசிரிய நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், பங்கேற்பாளர்களுக்கு விநியோகச் சங்கிலி இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலை வழங்குவதையும், இத்துறையில் சிறந்து விளங்க அவர்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x