

திருச்சி: திருச்சி மணப்பாறை சிப்காட்டில் நடந்த பாரத சாரணர் இயக்க பெருந்திரளணி விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராஜஸ்தான் வென்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் சாரண சாரணியர் இயக்கம் சார்பில், பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு சிறப்புப் பெருந்திரளணி (ஜாம்பூரி) திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவிலான சாரணர் கூடுகை (ஜாம்பூரி) நடத்தப்படும். இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த சாரணர்களும் பங்கேற்பர். அதன்படி, தமிழகத்தில் நடைபெற்ற இந்த ஜாம்பூரியில் இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் இலங்கை, நேபாளம், மலேசியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்தார். பெருந்திரளணி தொடக்க விழாவில் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் இடது கை குலுக்கியது என 5 நிகழ்வுகளுக்காக ‘எலைட்’ உலக சாதனை விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்று வந்த இந்நிகழ்வில் சாரணர்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் தங்கள் மாநிலம், நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள், சாகசங்களை செய்து அசத்தினர். பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜாம்பூரி இன்றுடன் நிறைவடைந்தது.
இதற்கான நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழகத்தில் ரூ.10 கோடியில் தலைமை சாரணர் இயக்க அலுவலகம் கட்டப்படும் என அறிவித்தார். சாரணர்கள் தங்களது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று தங்களது மாநிலங்கள், நாடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும், ஆனந்த கண்ணீருடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்து, அன்பை பரிமாறிக் கொண்டனர்.
முன்னதாக, வைரவிழாவின் இறுதி நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத் தலைவரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு, அணி தலைவர்களுக்கும், மாநிலங்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, வாழ்த்தி அணிகளை வழியனுப்பி வைத்தார்.
இதில், முதன்மை ஆணையரின் சாரணர் பிரிவு, முதன்மை ஆணையரின் வழிகாட்டி பிரிவு, விழாவில் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கான சாம்பியன் ஆகிய 3 விருதுகளை ராஜஸ்தான் மாநிலம் வென்றது. அம்மாநில அணி தலைவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ், வைரவிழாவின் நினைவாக அஞ்சல் அட்டை வெளியிட்டு சிறப்பித்தார்.
அடுத்த ஜாம்பூரி நிகழ்வானது, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறு உள்ளது. அதற்கான ஜோதியை அந்த மாநில சாரண, சாரணியரிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழாவில் சாரணர் இயக்க முதன்மை தேசிய ஆணைர் கே.கே.கந்தல்வால், அரசு செயலர்கள் ஜெயஸ்ரீமுரளீதரன், மதுமதி, சாரணர் தமிழக முதன்மை ஆணையர் அறிவொளி, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.