பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு: தேர்வுத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு: தேர்வுத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; தமிழக பள்ளிக்கல்வியில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பிப்ரவரி 17-ம் தேதி முதல் தேர்வுத் துறை வலைத்தளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் மார்ச் 4-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். அவற்றை தொகுத்து முழு விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதேபோல், தேர்வுக்கு வருகை புரியாதவர்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். இதுதவிர செய்முறைத் தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும் என்பன உட்பட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in