பள்ளிக்கல்வி துறையில் 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி துறையில் 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
Updated on
1 min read

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சட்ட அலுவலர், ஆசிரியர் உட்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக முடிவெடுக்க பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. அதில் தற்காலிகமாக உள்ள 52,578 பணியிடங்களில் 47,013 இடங்களை நிரந்தரமாக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆசிரியர் உட்பட 5,418 தற்காலிக பணியிடங்களில் பணியாற்றுபவர் ஓய்வுபெற்றவுடன் அந்தப் பணியிடங்களை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுகளை ஏற்று உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும். மேலும், 5,418 பணியிடங்களில் ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவை ரத்து செய்யப்படும் .

அதன்படி, நிரந்தரம் செய்யப்படும் பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் 5,741, பட்டதாரி ஆசிரியர்கள் 28,030, கணினி பயிற்றுநர் 1,880 பேர் உள்ளனர். இதுதவிர, இளநிலை உதவியாளர்கள் 3,073, ஆய்வக உதவியாளர்கள் 5,711, தொழிற்கல்வி ஆசிரியர்கள் 3,035 பேரும் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். திட்ட ஒருங்கிணைப்பாளர், நிர்வாக அலுவலர், உதவி கணக்கு அலுவலர், உதவி இயக்குநர் (மின்ஆளுமை) ஆகிய பணியிடங்களில் உள்ள தலா ஒரு இடம் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in