

சிவகங்கை: ‘பழைய இரும்பு கடையில் கூட வாங்க மறுக்கும் அளவுக்கு மடிக்கணினி தரம் இருந்ததால் அத்திட்டம் நிறுத்தம்’ என தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுத் தலைவரும், எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காரைக்குடியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தரமின்றி குடியிருப்புகள் கட்டுவதாக புகார் எழுந்தது. அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது சரிசெய்து விட்டதாக கூறினர். எனினும் அறிக்கை கேட்டுள்ளோம். திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த பரிந்துரை செய்யதுள்ளோம்.
தமிழகத்தில் தற்போது நிதி பற்றாக்குறை நிலவுகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவர்கள் நிதியே இல்லாமல் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றனர். இதனால் எனது தொகுதியில் கூட பணிகள் சரியாக நடக்கவில்லை. பத்து பணிகளுக்கு இரண்டு தான் நடைபெறுகிறது. எனினும் தற்போதைய அரசு நிதி மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஊழல் ஒழிக்க தான் நாங்களும் விரும்புகிறோம். இந்த அரசின் மீது ஊழல் புகார் குறித்து ஆதாரம் கொடுத்தால் விசாரிக்கப்படும். நிதி மேலாண்மை குழு பரிந்துரையால் அரசு நிதி மேலாண்மை சிறப்பாக மேற்கொணடு வருகிறது. இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கூட நிதி இருந்திருக்காது. கடன் வாங்கி தான் வட்டி கட்டும் நிலைமை தான் கடந்த காலங்களில் இருந்தது.
ஏராளமான சமூக நலத்திட்டங்களை நிறுத்தாமல் செயல்படுத்தி வருகின்றனர். முதல்வர் 85 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டதால் மின்வாரியத்தை மத்திய அரசு கையில் எடுத்துவிட்டது. தொடர்ந்து மாநில உரிமைகளை இழந்து வருகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கும்போது, ஆளுநர் அரசை நடத்த நினைக்கிறார். கனிமவளம் மூலம் வருவாயை அதிகரிக்க வேண்டுமென ஏற்கெனவே முதல்வரிடம் சொல்லிவிட்டேன். அதிமுக அரசு இருக்கும்போதே 2 ஆண்டுகள் தாலிக்கு தங்கம் திட்டம் முடங்கிவிட்டது. தங்கம் விலை உயர்ந்ததால் மீண்டும் செயல்படுத்த முடியவில்லை.
மேலும், சீனாவிடம் இருந்து வாங்கி மடிக்கணினிகளை வழங்கினர். அதை பழைய இரும்பு கடையில் கூட வாங்க மாறுக்கும் அந்தளவுக்கு தரமின்றி இருந்தன. அதனால் அதுவும் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மாற்றாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
ஓரிரு மாதங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நூறு நாள் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. நகர்ப்புறங்களில் கிராமங்களை மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் 100 நாள் திட்டத்தை நகர்ப்புறத்துக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.