ஜன.9 முதல் 13 வரை சென்னை ஐஐடி ‘சாரங் 2025’ கலாச்சார விழா

ஜன.9 முதல் 13 வரை சென்னை ஐஐடி ‘சாரங் 2025’ கலாச்சார விழா
Updated on
2 min read

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார விழாவின் 51-வது ஆண்டு சாரங் கொண்டாட்டத்தை ஜனவரி 9 முதல் 13ம் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.

இது தொடர்பாக கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இக்கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் சாரங் தனித்துவமான ஒன்று. புதுமையான சிந்தனை மற்றும் நிர்வாகத் திறன்களுடன் மாணவர்களின் துடிப்பான ஆற்றலையும் படைப்புத்திறனையும் வெளிக்கொணரும் வாய்ப்பை இது வழங்குகிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் கலைத்திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, இக்கல்வி நிறுவன வளாகத்தின் பன்முகத்தன்மைக்கு சான்றாகவும் விளங்குகிறது.

மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவர்கள், இந்தியா முழுவதும் இருந்து வரும் பங்கேற்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் இதனை வெற்றிகரமான நிகழ்வாக ஆக்குவதற்கு தங்கள் பங்களிப்பை வழங்கும் ஆதரவாளர்கள் உள்ளிட்டோருக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்தார்.

பல்வேறு கலாச்சாரங்களின் நாட்டுப்புற அணிவகுப்பு புதுமையான முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் இந்நிகழ்வு சாரங்கின் கருப்பொருளான கதைசொல்லும் ஆற்றலையும் கொண்டிருக்கும். இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார்.

சாரங் பற்றிப் பேசிய சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணா என் கும்மாடி, “நடப்பாண்டின் தொடக்கத்தில் இக்கல்வி நிறுவனத்திற்கு இசையையும் உயிர்ப்பையும் தர இருப்பதால், சாரங் நாம் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்வாகும். சாரங் வரலாற்றில் முதன்முறையாக வனவாணி பள்ளி வளாகத்தில் இருந்து திறந்தவெளி அரங்கு (Open Air Theatre) வரை தமிழ்நாடு நாட்டுப்புற அணிவகுப்பு நடைபெறவிருப்பது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பு.

இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில், சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் பற்றிய மூவர்ணம் (Tricolor) நடன நிகழ்ச்சியை நமது ஆளுநர் ஆர்.என்.ரவி, இசைஞானி இளையராஜா ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் நிகழ்த்திக் காட்டுவார்கள். இதுதவிர, தமிழக கலைகள்- கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கும், வெளிநபர்களுக்கும் தமிழக நாட்டுப்புறக் கலைகள் குறித்த பயிலரங்குகளையும் நாங்கள் நடத்துகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

நடப்பாண்டின் சாரங் நிகழ்ச்சியில், போட்டியற்ற தொகுதியில் நோவாவின் ‘இதற்கு முன்பு நடைபெறாத’ ஹிப்ஹாப் மற்றும் இண்டி ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. களரிபயட்டு, பாறை, ஒயிலாட்டம் போன்ற மக்களால் பெரிதும் அறியப்படாத கலைவடிவங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அனைவரையும் நிச்சயம் திருப்திப்படுத்தும் மற்றொரு சிறந்த நிகழ்வாக இடம்பெறவிருப்பது ‘ஸ்பாட்லைட் தொடர் விரிவுரைகள்’. பல்வேறு கலாச்சாரக் களங்களில் பரந்த அளவிலான திறமைகளைக் கொண்ட மதிப்பிற்குரிய பேச்சாளர்களை வரவேற்க சாரங் தயாராக உள்ளது. இதில் கே.எஸ்.சித்ரா, என்.எம்.நிஹாரிகா, சாண்டி மாஸ்டர், லிடியன் நாதஸ்வரம், கிஷன் தாஸ் ஆகியோர் அடங்குவர். புகழ்பெற்று விளங்கும் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த நுண்ணறிவு, வசீகரிக்கும் அனுபவங்களை ஒவ்வொரு அமர்வின்போதும் பார்வையாளர்களுக்கு வழங்குவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in