

சென்னை: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது சாதனை அல்ல. ஐஏஎஸ் ஆன பிறகு என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம் என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கூறினார்.
எஸ்எஸ்எல்எப் சிட்டி மற்றும் ஹவுசிங் சார்பில் பேராசிரியரும் எழுத்தாளருமான அ.முகமது அப்துல்காதர் எழுதிய ‘வானம் வசப்படும்’, ‘வெற்றியின் ரகசியங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழா சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு பங்கேற்று இரு நூல்களையும் வெளியிட, முதல் பிரதிகளை எஸ்எஸ்எல்எப் சிட்டி மற்றும் ஹவுசிங் நிறுவனர் ஜி.சக்திவேல் பெற்றுக்கொண்டார்.
விழாவில் இறையன்பு பேசியதாவது: “சாதிக்க விரும்பினால் முதலில் அச்சத்தை கடந்து செல்ல வேண்டும் என்ற கருத்தை நூலாசிரியர் அபதுல் காதர் 'வானம் வசப்படும்' நூலில் விளக்கியுள்ளார். வெற்றி முக்கியம் அல்ல, களத்தில் நிற்கிறோமே, போராடுகிறோமே அதுதான் முக்கியம்., அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பற்றியும் தனது நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரகாமை அனைவரும் அறிவோம். அவர் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவற்றுடன் கருணையையும் கடைபிடித்தவர். ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த பெண்ணின் சாதனையும் நூலில் இடம்பெற்றுள்ளது. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவது சாதனை அல்ல. ஐஏஎஸ் அதிகாரி ஆனபிறகு என்ன செய்தோம், எளிய மக்களுக்காக என்னென்ன பணிகளைச் செய்தோம் என்பதுதான் முக்கியம். அனைவரும் கல்வி வழியாகத்தான் சாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
எந்த பணியைச் செய்தாலும் நமது படைப்பாற்றலை துளிர்வித்து சிறப்பாக செய்ய முடியும். 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 65 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். அப்படிப்பட்ட இளமையான இந்தியா, திறமையான நாடாகவும் மாறும்” என்றார் இறையன்பு.
பாரத ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல முன்னாள் இயக்குநர் சதக்கத்துல்லா, ஆரோ கல்வி பணிகள் நிறுவனர் கே.ஆர்.மாலதி , ஏஎம்எஸ் கல்வி குழுமங்களின் தலைமைச் செயல் அலுவலர் முகமது சாலிஹ், ஒர்க்ஃப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூல் நிறுவனர் செய்யது நசுல்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியை கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் தொகுத்து வழங்கினார். முன்னதாக, நூலாசிரியர் முகமது அப்துல்காதர் ஏற்புரையாற்றினார்.