

மதுரை: காமராஜர் பல்கலையில் பிஎச்டி நுழைவுத்தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரிக்கவேண்டும் என அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்கள் கோருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலையில் கடந்த செப்டம்பரில் பல்வேறு துறைகளுக்கான பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடந்தது. 1000-க்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் தேர்வெழுதிய குறிப்பிட்ட மாணவ, மாணவிகளிடம் ஆராய்ச்சித்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
இப்புகார் குறித்து விசாரணை குழு ஒன்றை ஏற்படுத்தி விசாரிக்க உயர் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலர் பல்கலை கன்வீனர் குழு தலைவருக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில், பல்கலை பயோ டெக்னாலஜி பேராசிரியர் கணேசன் தலைமையில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் அடங்கிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசாரணை தொடங்கும் முன்பே இக்குழுவிற்கு எதிர்ப்பு கிளம்பியது.
முறைகேடு புகாரை விசாரிக்க, இதே பல்கலை பேராசிரியர்களை விசாரணைக்குழுவில் நியமித்தால் உண்மை நிலவரம் மறைக்கப்படலாம். வெளியிலுள்ள பேராசிரியர்கள் அடங்கிய குழு அல்லது பிற ஏஜென்சி மூலம் விசாரிக்கவேண்டும் என, தற்போதைய மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் , அலுவலர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது. இதனால் விசாரணைக்கு குழு மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகிறது.
இது குறித்து முன்னாள் பேராசிரியர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கூறியது: ‘ஏற்கெனவே இப்பல்கலை பல்வேறு முறைகேடு சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதிபதிகள் அடங்கிய சிறப்புக்குழுவெல்லாம் அமைக்கப்பட்டன. ஆனாலும் தவறு செய்தவர்கள் மீது பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எழுந்துள்ள பிஎச்டி நுழைவுத்தேர்வு பண முறைகேடு குறித்து விசாரிக்க ஏற்படுத்திய குழு விதியை மீறி அமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சித்துறையில் நடந்த இப்பிரச்சினையை விசாரிக்க அத்துறை சார்ந்த ஜூனியர் பேராசிரியர்களை நியமித்தால் எப்படி உண்மை நிலை தெரியும்.
இம்முறைகேடு மூலம் சுமார் 300 மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றிருப்பதாக தெரிகிறது. முறைகேடுக்கு தொடர்புடைய நபரை, துறை மாற்றம் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் இல்லை. பேராசிரியர்களை தவிர்த்து சிபிசிஐடி போன்ற சிறப்பு ஏஜென்சி மூலம் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். இதை வலியுறுத்தி உயர்கல்வித்துறை, அமைச்சருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்” என்றனர்.