

தமிழகம் முழுவதும் நாளை நடக்க இருந்த பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு, மழையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க, ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த நிலையில், இந்த ஆண்டின் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நவம்பர் 12-ம் தேதி தொடங்கி 25-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 9-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. தேர்வு நாளை (டிசம்பர் 14) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் நலன் கருதி, இந்த தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து, இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் என்.லதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், டிசம்பர் 14-ம் தேதி (நாளை) நடக்க இருந்த ஊரக திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.