கோப்புப் படம்
கோப்புப் படம்

மாநகராட்சி சார்பில் ஃபெடரல் வங்கி ஒத்துழைப்புடன் 500 மாணவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பள்ளிப்பை விநியோகம்

Published on

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ஃபெடரல் வங்கி ஒத்துழைப்புடன் 500 மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பள்ளிப்பை மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பு நேற்று வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பையை மக்கும், மக்காத குப்பையாக வகை பிரித்து அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் ஃபெடரல் வங்கி உதவியுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த, எளிதில் மக்கக்கூடிய சணலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பள்ளி பைகள் மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பு 500 மாணவ, மாணவிகளுக்கு அண்ணாநகர் தொகுதி எம்எல்ஏ எம்.கே.மோகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் என்.ராமலிங்கம், ஃபெடரல் வங்கியின் சென்னை மண்டல தலைவர் பெட்டி ஆண்டனி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in