

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை டிசம்பர் 2 முதல் 6-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை: “அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை டிசம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்” என அதில் அவர் கூறியுள்ளார்.