

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்எட் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. எம்எட் சேர விரும்பும் மாணவர்கள் www. tngasa.n என்ற இணையதளத்தை பயன்படுத்தி நவம்பர் 29ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ஒரு கல்லூரிக்கு ரூ.58. பதிவு கட்டணம் ரூ.2. எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தையும் பதிவு கட்டணத்தையும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ வசதி வாயிலாக ஆன்லைனில் செலுத்திவிடலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணைதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.