சிறப்பு பள்ளி மாணவர் விளையாட்டு போட்டி: ரூ.3.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை: மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தொடங்கி வைத்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் டிசம்பர் 3-ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்ப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை வேப்பேரி மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வடசென்னைக்கு உட்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள் உட்பட மொத்தம் 32 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரி பொருத்தப்பட்ட 2 சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி என 8 பேருக்கு ரூ.3.52 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
12-14 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
