அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ‘சிறந்த அறிவியல் ஆசிரியர்’ விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ‘சிறந்த அறிவியல் ஆசிரியர்’ விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published on

சென்னை: அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்கள், சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அறிவியல் நகரம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “பள்ளி மாணவர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர்கல்வியில் மாணவர்கள் அறிவியல் துறையை எடுப்பதற்கும், விஞ்ஞானிகளாக உருவாவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் அறிவியல் நகரம் ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், மற்றும் கணினி அறிவியல் அல்லது புவியியல் அல்லது விவசாயம் ஆகிய 5 துறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கவுரையை www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் பரிந்துரை கடிதம் பெற்று டிசம்பர் 23-ம் தேதிக்குள் சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் நகரம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். விருதுக்கு தேர்வுசெய்யப்படும் 10 அறிவியல் ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in