நெட் தேர்வில் ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்ப்பு: யுஜிசி

நெட் தேர்வில் ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்ப்பு: யுஜிசி
Updated on
1 min read

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் ஆயர்வேதா உயிரியல் பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். இந்த தேர்வுக்கான தொகுதியில் தற்போது தமிழ், வரலாறு, பொருளியல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் நெட் தேர்வுக்கான பாடத் தொகுதியில் புதிதாக ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி இன்று (நவ.7) வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்; யுஜசியின் 581-வது குழுக் கூட்டம் கடந்த ஜூன் 25-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் நிபுணர் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் நெட் தேர்வு தொகுதியில் ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை டிசம்பர் பருவத்துக்கான தேர்வில் இருந்து அமலுக்கு வரும். இதற்கான பாடத்திட்டம் யுஜிசி இணையதளத்தில் (https://ugcnetonline.in) வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in