

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (அக். 31) கொண்டாடப்படுகிறது. அன்று வியாழக்கிழமை என்பதால் சொந்த ஊருக்குச் சென்று வருவது சிரமம் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். மேலும், தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவ. 1-ம் தேதி விடுமுறை அளித்து உத்தரவிட்டது. மேலும், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக அக்.30-ம் தேதி (இன்று) அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 30-ம் தேதி (இன்று) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.