

சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிஜிட்டல் போட்டோகிராபி, டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிகல்), உணவு உற்பத்தி (பொது), ஸ்மார்ட்போன் ஆப் டெஸ்டர் உள்ளிட்ட தொழிற் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இங்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக 2024-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் அக்.31-ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.
சேர்க்கை பெறுவோருக்கு அரசால் கட்டணமில்லா பயற்சி, விலையில்லா சீருடை மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் விலையில்லா வரைபடக் கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கை உதவிமையத்தை நேரில் அணுகலாம். 044-2250 1350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.