அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி ஆளுநர் ரவி பாராட்டு

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் உள்ளிட்டோர். படம்: நா.தங்கரத்தினம்
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் உள்ளிட்டோர். படம்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

கொடைக்கானல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.

கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 31-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் கே.கலா வரவேற்றார். பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் பேசியதாவது: நான் எந்த பின்புலமும் இல்லாமல் உயர்ந்து, தற்போது துணைவேந்தர் என்ற உயர்ந்த பதவியை அடைந்துள்ளேன். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. துணைவேந்தராகும் வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பெரிய கனவுகாண இதைவிட சிறந்த நேரம் எதுவுமில்லை. பொருளாதாரம், கலாச்சார ரீதியாக நாடு மறுமலர்ச்சியை அடைந்து வரும் சகாப்தத்தில் வாழ்வது நமக்கு அதிர்ஷ்டம். நமது தேசம், உலகளாவிய தரத்தை வடிவமைக்கும் உந்துசக்தியாக உள்ளது. நாட்டின் உண்மையான பலம் பொருளாதாரத்தில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மட்டும் இல்லை. அதன் சமூகக் கட்டமைப்பில் உள்ளது. மாணவிகள் பெற்ற அறிவை, கல்வியைப் பயன்படுத்தி, வசதி குறைந்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். உலகில் பெண்களின் தலைமை மிகவும் முக்கியமானது.

மகளிர் தலைமையில் இருக்கும்போது, நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைகின்றன என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், 70 மாணவிகளுக்கு முனைவர் பட்டம், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 16 மாணவிகள் உட்பட 373 பேருக்கு நேரடியாக ஆளுநர் ஆர்.என்.ரவிபட்டங்களை வழங்கிப் பாராட்டினார். மேலும், 6,214 பேருக்கு அஞ்சல் வழியாக பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், பல்கலை. பதிவாளர் ஷீலா, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, நிதிஅலுவலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணை வேந்தருமான கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in