

கோவை: தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. பொது தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.
கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, அரசு தேர்வுகள் இயக்குநர் லதா, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் முத்துக்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வை பொருத்தவரை செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும். பிளஸ் 1 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும்.
10-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22-ம் தேதியில் இருந்து28-ம் தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம்தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுமுடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சம் பேர், பிளஸ் 1 தேர்வை 8 லட்சம் பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வை 7.50 லட்சம் முதல்8 லட்சம் பேர் என மொத்தம் 25 லட்சம் பேர் எழுத உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.