

சென்னை: பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் தேர்தல் நடைமுறைகள், வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மாணவர்களிடம் வாக்குரிமை குறித்த கல்வி அறிவை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் - மத்திய கல்வி அமைச்சகம் இடையே கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் தேர்தல் நடைமுறைகள், வாக்குரிமை பெறுவதன் அவசியம் தொடர்பான பாடத்திட்டங்களைச் சேர்க்க வேண்டும்.
மேலும், இது தொடர்பான விவாதங்கள், போட்டிகள், பயிலரங்குகள் போன்றவற்றை அவ்வப்போது நடத்தி அனைத்து மாணவர்களும் வாக்குரிமை குறித்த கல்வி அறிவை முழுமையாக பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாராம்சங்கள் குறித்த விவரங்களும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.